அரசு டாக்டர் மீதான பாலியல் புகார் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை


அரசு டாக்டர் மீதான பாலியல் புகார் குறித்து   அதிகாரிகள் குழு விசாரணை
x

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் மீது பாலியல் புகார் கூறப்பட்டதை தொடர்ந்து பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையிலான குழு நேற்று விசாரணை மேற்கொண்டது. இதில் பரபரப்பு தகவல் அம்பலமாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் மீது பாலியல் புகார் கூறப்பட்டதை தொடர்ந்து பொதுசுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையிலான குழு நேற்று விசாரணை மேற்கொண்டது. இதில் பரபரப்பு தகவல் அம்பலமாகி உள்ளது.

டாக்டர் மீது புகார்

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த டாக்டர் அங்கு பணியில் இருந்த போது பிரசவத்துக்காக வந்த பெண்களை மருத்துவ சிகிச்சை அளிக்கிறேன் என்ற போர்வையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. டாக்டரின் விபரீத பாலியல் துன்புறுத்தலின் காரணமாக ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு இறந்து போனதாகவும், அந்த பெண்ணின் கர்ப்பப்பையும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுமட்டுமின்றி அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த நர்சுகள் மற்றும் கிராமப்புற செவிலியர்களிடமும் பாலியல் துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த டாக்டர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

விஷாகா குழு

இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த டாக்டரை அங்கிருந்து வேறு இடத்துக்கு தற்காலிக பணிமாற்றம் செய்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அங்கு பணி செய்யாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் டாக்டர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோர்ட்டு உத்தரவின்பேரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரக பாலியல் ரீதியான விசாரணை முறையீட்டுக்குழு (விஷாகா கமிட்டி) அமைக்கப்பட்டது. மேலும் தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குனர் சித்ரா தலைமையிலான 8 பேர் கொண்ட அந்தக்குழு நேற்று நாகர்கோவிலுக்கு வந்தது.

3 மணி நேரம் விசாரணை

பின்னர் நேற்று காலை நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டரிடமும், அவரால் பாதிப்புக்குள்ளான பெண்ணிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தக்குழுவினர் நண்பகல் 12 மணிக்கு கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு டாக்டர் மீது புகார் கூறிய செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என மொத்தம் 12 பேரிடம் விசாரணை நடத்தியது.

இதில் பெரும்பாலானோர் டாக்டருக்கு எதிராகவும், சிலர் டாக்டருக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 3 மணி நேரம் நடந்தது. விசாரணையின்போது செவிலியர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர்கள் தெரிவித்த தகவலை அந்த குழுவினர் பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் மீண்டும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து விசாரணை அறிக்கையை கோப்பாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாலியல் புகார் தொடர்பாக அரசு டாக்டர் மீது மாநில அளவிலான விஷாகா குழு விசாரணை நடத்தியது குமரி மாவட்ட சுகாதாரத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story