புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை குறித்து வீடு, வீடாக அரசு செயலாளர் ஆய்வு


புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை குறித்து  வீடு, வீடாக அரசு செயலாளர் ஆய்வு
x

புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை குறித்து வீடு, வீடாக அரசு செயலாளர் ஆய்வு

நாகப்பட்டினம்

நாகையில் புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை குறித்து வீடு, வீடாக சென்று அரசு செயலாளர் ஆபிரகாம் ஆய்வு செய்தார்.

வீடு, வீடாக சென்று ஆய்வு

நாகையில் புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை குறித்து சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் ஆபிரகாம் வீடு, வீடாக சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது நகராட்சிக்குட்பட்ட நாகநாதர் சன்னதி தெரு, சட்டையப்பர் கீழ மடவளாகம், சட்டையப்பர் மேல வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சிறப்பு முகாம்கள்

நாகை மாவட்டத்தில் கடந்த 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5.1.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. இதில் 2,70,598 ஆண்களும், 2,83, 804 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5,54,424 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பெறப்பட்ட பெயர் சேர்த்தலுக்கான படிவம்-6, நீக்கலுக்கான படிவம்-7, திருத்தலுக்கான படிவம்-8 ஆகியவற்றை விரைந்து முடித்திட வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வு கூட்டம்

முன்னதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சமூக சீர்திருத்த துறை அரசு செயலாளர் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மற்றும் திருக்குவளை தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story