ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்
மண்டல தடகள போட்டியில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
சேரன்மாதேவி:
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 63 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டியில் தங்கபதக்கம் வென்றனர். வட்டு எறிதல், 100மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கோலூன்றி தாண்டுதல் ஆகியவற்றில் வெள்ளி பதக்கம் பெற்றனர். 400 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று, 63 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு ஸ்காட் நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிமாறன், நிர்வாக அலுவலர் சித்திரைசங்கர், உடற்கல்வி இயக்குனர் அன்வர் ராஜா ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.