மண்டல பளு தூக்குதல் போட்டி
குற்றாலத்தில் மண்டல பளு தூக்குதல் போட்டி நடந்தது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இதில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு பள்ளி பிரிவாகவும், 17 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களுக்கு கல்லூரி பிரிவாகவும் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நெல்லை மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போட்டியை தொடங்கி வைத்தார். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு செய்திருந்தார்.