தேசிய தரவு தளத்தில் தொழிலாளர் விவரம் பதிவு
தேசிய தரவு தளத்தில் இணையதளத்தின் மூலம் 156 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம் என்று உதவி ஆணையர் தெரிவித்தார்
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக https://eshram.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 156 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இதில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய வயது வரம்பு 18 வயதில் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ. வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாகவும் இருக்கக்கூடாது. பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. தொழிலாளர்கள் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையங்களுக்கு சென்றோ கட்டணமின்றி பதிவு செய்யலாம். பதிவு செய்தவுடன் பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும், அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இதில் பதிவு தொழிலாளர்களுக்கு பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.