பவானி பகுதியில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரப்பதிவு தொடங்கியது
பவானி பகுதியில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரப்பதிவு தொடங்கியது
பவானி
பவானி பகுதியில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பத்திரப்பதிவு தொடங்கியது.
கலெக்டரிடம் புகார்
பவானியில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக வக்பு வாரியம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பவானி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பழைய பஸ் நிலையம், சீனிவாசபுரம், ராயல் தியேட்டர் ரோடு, பழனிபுரம், வர்ணபுரம், பாவடி வீதி, மேட்டூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள இடங்கள் கடந்த 9 மாதங்களாக பத்திரப்பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.
சொத்துகள் வாங்க மற்றும் விற்க முடியாமல் பொதுமக்கள் இருந்து வந்தனர். இதனால் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள் எங்கெங்கு உள்ளது என்பதை முறைப்படுத்த வேண்டும் என பவானி பத்திர பதிவுத்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்திருந்தனர்.
வக்பு வாரியம் அறிவிப்பு
மேலும் பவானி நகர தி.மு.க. சார்பில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மூலம் சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பவானியில் வக்பு வாரியத்துக்கு ஜமாத், முஸ்லிம் மயானம் மற்றும் அந்த பகுதிகளை சுற்றியுள்ள ஒரு ஏக்கர் 69 சென்ட் இடம் சொந்தம் என தமிழ்நாடு வக்பு வாரியம் தெரிவித்திருந்தது.
பத்திரப்பதிவு தொடங்கியது
இதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளில் உள்ள இடங்களை வாங்க-விற்க தடையின்மை சான்றினை சென்னை தமிழ்நாடு வக்பு வாரியம் சென்னையில் உள்ள மாநில பத்திரப்பதிவு துறை ஆணையாளருக்கும், பவானி பத்திரப்பதிவுத்துறை அலுவலருக்கும் அனுப்பியது.
அதைத்தொடர்ந்து பவானியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீனிவாசபுரம், வர்ணபுரத்தில் 2 இடங்கள் என மொத்தம் 3 பகுதிகளில் உள்ள இடங்களுக்கான பத்திரப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி மேற்கொண்ட வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன், நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன், நில அளவையர், நில மீட்பு குழு பொறுப்பாளர், நகராட்சி உறுப்பினர்கள் என அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.