வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - கலெக்டர் உமா


வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - கலெக்டர் உமா
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

வேளாண் எந்திரங்கள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக 2023-24-ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர்டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் ஊராட்சிக்கு 2 அல்லது 3 வீதம் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது.

உழவன் செயலி மூலம் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.1 கோடியே 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நடைமுறையில் உள்ள 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலியில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவரங்களை பெற்றிட நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story