கொடைக்கானலில் ஓடையில் வீசப்பட்ட பதிவு தபால்கள், ஆதார் அட்டைகள்
கொடைக்கானலில் பதிவு தபால்கள், ஆதார் அட்டைகள் ஓடையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு துறை சம்பந்தப்பட்ட தபால்கள் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பதிவு தபால்களில் வருவது வழக்கம்.
இந்தநிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சாலையோரத்தில் உள்ள ஓடையில் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், அரசு பணிகள் குறித்த தபால்கள், நகைக்கடன் ஏலம் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்கள் குப்பை போல் குவிந்து வீசப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட தபால்கள் கிடந்தது. பின்னர் அவற்றை சேகரித்த போலீசார், கொடைக்கானல் தலைமை தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த தபால்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தபால்கள் என்று தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தபால்களை சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் ஒப்படைக்காமல், ஓடையில் வீசிய தபால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன்பேரில் தபால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.