போலி ஆவணங்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் :சார் பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்


போலி ஆவணங்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் :சார் பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்
x

போலி ஆவணங்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என சார் பதிவாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

கடலூர்


கடலூர் மண்டல வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார் பதிவாளர்களின் பணித்திறன் தொடர்பான மண்டல சீராய்வு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினா்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கடலூா் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசுக்கு வருவாய்

பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், பதிவுத்துறையானது அரசின் முக்கியமான வருவாய் தரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் அரசின் பல்வேறு அரசு நல திட்டங்களுக்கு மூல ஆதாரமாக பதிவுத்துறை செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர்கள் தங்களது பணியில் சிறப்பாக செயல்பட்டு, அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடைய முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

பதிவுத்துறையின் சேவையை நாடிவரும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விரைவாக செயல்பட வேண்டும்.

வருவாய் இலக்கு

சார் பதிவாளர்கள் அனைவரும் வருவாய் இலக்கினை அதிகரிக்கும் நோக்கத்தோடு செயல்படவும், ஆவணப்பதிவின் போது உரிமையாளர்களை கண்டறிந்து போலி ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் கட்டிடங்களை மறைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வண்ணம் பதிவுத்துறை தலைவரால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் செய்து முடித்திட வேண்டும்.

நடவடிக்கை

மேலும் பத்திர பதிவில் 'லே-அவுட்'டை பொறுத்தவரை சென்ட் கணக்கில் இடத்தின் அளவை பதிவு செய்யாமல், சதுர அடி கணக்கில் தான் பதிய வேண்டும். வீட்டுமனைகளை சதுர அடியில் பதிவு செய்தால் தான் அரசுக்கு அதிக வருவாய் வரும். இதை மீறி செயல்படும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் விளை நிலங்களையும், புஞ்சை நிலங்களையும் சென்ட் கணக்கில் பதிவு செய்யலாம் என்றார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், அய்யப்பன், ராதாகிருஷ்ணன், வேல்முருகன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனம் நன்றி கூறினார்.


Next Story