முதல்- அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம்
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை வழங்கக்கோரி முதல்- அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது
கபிஸ்தலம்;
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை உடனே வழங்கக்கோரி கபிஸ்தலம் தபால் நிலையத்தில் பதிவு தபால் அனுப்பும் போராட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.வி.சங்கர் தலைமையில் நடந்தது. இதன்படி கபிஸ்தலம் தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் 50 பதிவு தபாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். வன்னியர்களுக்கான உரிமையை வழங்க காலதாமதம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை.இது எங்களின் உரிமை போராட்டம். கடந்த கல்வியாண்டிலேயே வன்னியர்கள் இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. 2023- 24 -ம் கல்வி ஆண்டிலாவது எங்களின் நியாயமான கோரிக்கையான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு வருகிற 31-ந் தேதிக்குள்(புதன்கிழமை) நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.