பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பில் தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் மேற்பார்வையில் தீயணைப்பு அலுவலர்கள் ராஜா, கோபால், செல்வமணி மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அடங்கிய குழுவினர் விழிப்புணர்வு ஒத்திகையை நடத்தினார்கள். தீ விபத்துகள் நடக்கும்போது தீயை அணைக்கும் முறைகள், பேரிடர் காலங்களில் கட்டிட இடுப்பாடுகள் சிக்கியவர்களை மீட்கும் முறை, விபத்தில் காயமடைந்து பாதிக்கப்படுபவர்களை மீட்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
முதலுதவி சிகிச்சை
பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் லைப் ஜாக்கெட்டுகள், அதிநவீன பைபர் படகுகள் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது. உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள், முதல் உதவி சிகிச்சை முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மை துறை தனி தாசில்தார் ரமேஷ் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.