குடியரசு தின விழா ஒத்திகை ஆயுதப்படை மைதானத்துக்கு மாற்றம்


குடியரசு தின விழா ஒத்திகை ஆயுதப்படை மைதானத்துக்கு மாற்றம்
x

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் குடியரசு தின விழா போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை ஆயுதப்படை மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

திருநெல்வேலி

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் குடியரசு தின விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அங்கு கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

அன்றைய தினம் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் சுதந்திரத்துக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட உதவிகள், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் விஷ்ணு வழங்கி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதற்காக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் நேற்று முன்தினம் போலீஸ் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சி அளித்தது. இதனால் நேற்று அங்கு நடைபெற இருந்த அணிவகுப்பு ஒத்திகை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நடைபெற்றது.

இதற்கிடையே மைதானத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் மணல் கொண்டு சமன்படுத்தும் பணியானது நேற்று நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. அங்கு மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையில் போலீசார் குடியரசு தினவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் பள்ளி மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சத்தியவான், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் ரெயில்நிலையத்தில் தண்டவாளங்கள், பார்சல் பிரிவு, ரெயில்களில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் சிந்து உதவியுடன் சோதனை நடத்தினர். ரெயிலில் வந்த பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர். தொடர்ந்து அவர்கள் இன்றும் சோதனையில் ஈடுபட உள்ளனர்.


Next Story