திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை


திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை
x

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை திண்டுக்கல்லில் நடந்தது.

திண்டுக்கல்

மீட்பு ஒத்திகை

பருவ மழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 5 இடங்களில் ஒத்திகை நடத்தும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த ஓடையூரில் உள்ள குளத்தில் ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், உதவி அலுவலர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திண்டுக்கல் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் 25 தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் மீட்பது குறித்து செய்து காண்பித்தனர்.

முதலுதவி சிகிச்சை

அதேபோல் காலிக்குடங்கள், தண்ணீர் கேன்களை கட்டி வெள்ளத்தில் இருந்து மீண்டு வருதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது ஆகியவற்றையும் தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து சுகாதாரம், வருவாய்த்துறையினர் ஒத்திகை செய்தனர்.

இதனை கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆர்.டி.ஓ. பிரேம்குமார், தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பழனி, கொடைக்கானல்

பழனி அருகே தாமரைக்குளம் சண்முகநதி ஆற்று பகுதியில் ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு படை மற்றும் மருத்துவக்குழு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு கெங்குவார்ஓடை பகுதியில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றில் தாசில்தார் தனுஷ்கொடி தலைமையில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப், விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் மீட்பு குழுவினர் கலந்துகொண்டனர்.

வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி குடகனாற்றில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தாசில்தார் சக்திவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story