பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் விண்ணப்பம் நிராகரிப்பு


பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் விண்ணப்பம் நிராகரிப்பு
x

குன்னம் பகுதியில் பயிர் காப்பீடு செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பயிர் காப்பீடு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 18 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளமும் 4 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தியும் பயிரிடப்பட்டது. மத்திய அரசு, வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தி இருந்தது. அதன்படி மக்காச்சோளம் பயிர் 1 ஏக்கருக்கு, ரூ.311-ம், பருத்திக்கு ரூ.532-ம், கரும்புக்கு ரூ.2,782-ம், நெல்லுக்கு ரூ.564-ம் என நிர்ணயிக்கப்பட்டு கடைசி தேதியாக அக்டோபர் மாதம் 15-ந் தேதி எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் கால கெடுவிற்குள் உரிய ஆவணங்களை வழங்கி பயிர் காப்பீடு செய்ய அருகாமையில் உள்ள கணினி மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை செலுத்தினர்.

இந்நிலையில் வேப்பூர் வட்டார பகுதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு விண்ணப்பம் தற்போது கடந்த சில நாட்களாக நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, அவரவர் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ் எம்.எஸ்.) வந்துள்ளது.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அந்த குறுஞ்செய்தியில் வங்கி கணக்கு சரியில்லை, பயிர் காப்பீடு மாற்றி செய்து உள்ளீர், ஆதார் கார்டு இல்லாததாகவும், சொந்த இடத்தில் பயிரிடப்பட்டும், வாடகை ஒப்பந்தம் கேட்டும், ஆதார் கார்டு பொருந்தவில்லை, தவறான பயிர் சாகுபடி, பெயர் சரியில்லை, பெயரில் இன்சியல் பொருந்த வில்லை, வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவும், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் சரியில்லை எனவும் மேற்கூறப்பட்ட காரணங்களை கூறி விண்ணப்பங்கள் நிராகரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு எதிர்பாராத நேரத்தில் படைப்புழு தாக்குதல், போதிய பருவ மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் எதிர்பார்த்த சாகுபடி கிடைக்காமல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தற்போது வந்துள்ள நிராகரிப்பு குறும் செய்தியால் பயிர் காப்பீடு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில் உள்ளனர். நிராகரிக்கப்பட்ட செய்தி பல விவசாயிகளுக்கு தெரியாத நிலையிலும் உள்ளனர். பல விவசாயிகள் கணினி மையத்தை நோக்கி படையெடுத்தும் உள்ளனர்.

குறுஞ்செய்தி

எந்த தவறும் இல்லாமல், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள விண்ணப்பங்களை பயிர் காப்பீடு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் காப்பீடு நிறுவனம் குழப்பங்களை சரி செய்து நம்பிக்கை ஊட்டும் வகையில் மனு நிராகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பி உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பயிர் காப்பீடு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விவசாயி அறிவழகன் கூறுகையில், எனது தந்தை கருப்பையா மற்றும் எனக்கும் பேரளி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 8 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு காப்பீடு செய்து இருந்தோம். இந்நிலையில் எனது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக நிலம் மற்றும் வங்கி தகவல் சரியாக இல்லாத காரணத்தால் திருப்பப்பட்டுள்ளது என வந்துள்ளது. ஆனால் நாங்கள் கடந்த ஆண்டு இதுபோன்று ஆவணங்களை சமர்ப்பித்து பயிர் காப்பீடு தொகை பெற்றுள்ளோம். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்தும் காப்பீடு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு நிறுவனம் ஆய்வு செய்து எனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது பயிரிடப்பட்ட மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது 25 மூட்டைகளுக்கு பதிலாக 10 மூட்டையே கிடைக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில் பயிர் காப்பீடு மனுவை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

குழப்பமாக உள்ளது

பேரளியை சேர்ந்த விவசாயி ஞானசேகரன் கூறுகையில், நான் 11 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தேன். பயிர் காப்பீடும் செய்திருந்தேன். இந்நிலையில் எனக்கு வங்கி தகவல் சரியில்லை என்று குறுஞ்செய்தியாக வந்திருந்தது. ஆனால் கணினி மையத்தில் சென்று விசாரித்த போது ஆதார் கார்டு பொருத்தம் இல்லை என்ற காரணத்தாலும் மனு நிராகரிக்கப்பட்டு இருந்து என இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தது. திருப்பி அனுப்பப்பட்ட காப்பீடு மனுவிற்கு வெவ்வேறு காரணம் கூறி வந்துள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் பயிர் காப்பீடு நிறுவன அலுவலர்களும் என்னை தொடர்பு கொண்டு வயலை ஆய்வும் செய்தனர். எதை நான் நம்புவது என்றும் தெரியவில்லை, குழப்பமாக உள்ளது. எனது பயிர் காப்பீடு மனுவை ஏற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும் என்றார். குன்னம் பகுதியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story