பெண் தற்கொலை வழக்கில் உறவினர் கைது
ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை வழக்கில் உறவினர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருடைய மனைவி சஜிதா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சஜிதா கடந்த 13-ந்தேதி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சஜிதாவின் சகோதரரான கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சிஜி (43) என்பவர் தனது சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சஜிதாவின் உறவினர் நெல்லை டவுன் ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மனைவி சுபிதா (25) என்பவரிடம் சஜிதா தனது கணவருக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை கொடுத்து ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரிசெல்வம் வீட்டு பத்திரத்தை தேடியதால் அந்த பத்திரத்தை சுபிதாவிடம், சஜிதா கேட்டுள்ளார். அதற்கு சுபிதா ரூ.1.50 லட்சம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரத்தை திருப்பி தருவேன் என கூறியுள்ளார். அதன் காரணமாகவே மனம் உடைந்த சஜிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுபிதா மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.