ஆசிரியை கொலையில் உறவினர் கைது
உடன்குடி ஆசிரியை கொலையில் உறவினர் கைது செய்யப்பட்டார். கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உடன்குடி:
உடன்குடியில் ஆசிரியை கொலையில் உறவினர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிரியை கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியைச் சேர்ந்த ரஸ்கின்டிரோஸ் மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுடைய மகன் ெசன்னையில் உள்ளார். அதுேபால் ரஸ்கின்டிரோசும் மும்பையில் வசித்து வருகிறார். இதனால் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் உள்ள வாடகை வீட்டில் மெட்டில்டா மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டில் மெட்டில்டா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மெட்டில்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
மேலும் ஆசிரியை வீட்டின் அருகில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன் துறையைச் சேர்ந்த ஜெயதீபக் (35) என்பதும், ஆசிரியை மெட்டில்டாவை கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஜெயதீபக் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், மெட்டில்டா எனக்கு அத்தை முறையாகும். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்ததால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று தேவையான உதவிகளை செய்து வந்தேன். மேலும் செலவுக்கு பணம் என்று கேட்டால் தருவார்.
தலையணையால் அமுக்கினேன்
இதேபோல் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மெட்டில்டாவிடம் செலவுக்கு பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் தலையணையை எடுத்து மெட்டில்டா முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்தேன். இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கதவை தட்டினார்கள். கதவை திறந்தால் மாட்டிக்கொள்வோம் என்று வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டேன். பின்னர் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க சென்ற நேரத்தில் நைசாக கதவை திறந்து வெளியே வந்தேன். அந்த சமயத்தில் போலீசார் வந்ததால் சிக்கிக்கொண்டேன்.
மேற்கண்டவாறு ஜெயதீபக் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெயதீபக்கை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.