திருமணமான இளம்பெண் தற்கொலை: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


திருமணமான இளம்பெண் தற்கொலை:  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை  கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x

திருமணமான இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பன் மகள் ஷர்மிளா (வயது 24). இவருக்கும், திண்டிவனம் அருகே வைரபுரத்தை சேர்ந்த அசோக் (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 27-ந் தேதி ஷர்மிளா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷர்மிளாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திண்டிவனம் சப்-கலெக்டரும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஷர்மிளாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அசோக் கொலை செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்ற ஷர்மிளாவின் உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story