மின் ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி ெசய்தபோது மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 மணி நேரம் மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி ெசய்தபோது மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 3 மணி நேரம் மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் தாக்கி பலி
திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி காலனி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் தமிழ் ராஜ் (வயது 26), இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் குரும்பகேரி ஊராட்சி சோமவாதபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பாமரை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
அந்த பகுதியில் இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தமிழ்ராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருதங்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை இறந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்ராஜ் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊர் பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருப்பத்தூர்- ஆலங்காயம் மெயின் ரோட்டில் பிணத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உறவினர்கள், தமிழ்ராஜ் டிரான்ஸ்பார்மரில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். டிரான்ஸ்பாரரை பராமரிக்க நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். எனவே காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி உடலை எடுக்க மறுத்தனர்.
எம்.எல்.ஏ.சமரசம்
தொடர்ந்து 3 மணி நேரமாக போராட்டம் நடைபெற்றது தகவல் அறிந்த திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடனடியாக அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஈமச்சடங்கிற்கு மின்சார வாரியம் மூலம் நிதி பெற்றுத் தந்தார். அதன்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.