முதியவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


முதியவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x

பனங்குளம் கிராமத்தில் முதியவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

முதியவர் மர்ம சாவு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜரெத்தினம் (வயது 62). இன்று காலை பனங்குளம் தெற்கு கடைவீதிக்கு சென்று டீ குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர் தனது மகளுக்கு செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு ராஜரெத்தினம் வீட்டிற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் பாண்டிக்குடி செல்லும் வழியில் பனங்குளம் தெற்கு கிராமத்தில் உள்ள ஒரு சமுதாயக்கூடம் அருகே அவரது சைக்கிள் நின்றுள்ளது. அதன் அருகில் ராஜரெத்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜரெத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் கழுத்துப் பகுதியில் ரத்தம் வந்துள்ளதால் யாரோ மர்ம நபர்கள் ராஜரெத்தினத்தை கொலை செய்திருக்கலாம். எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் பாண்டிக்குடி விலக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story