ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடலை பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்


ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடலை பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குழந்தை சாவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது 2½ வயது குழந்தை சுபித்ரா. இந்த குழந்தையை உடல் நலம் இன்றி நேற்று காலை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உறவினர்கள் கொண்டு வந்தனர்.

அப்போது, சுபித்ராவை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எதிர்பாராத விதமாக இறக்கும் போது பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென டாக்டர்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல்

ஆனால் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்து முடித்து சிறுமியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இசவன்குளத்தை சேர்ந்த உறவினர்கள், பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம்-புதுக்குடியில் உள்ள நெல்ைல-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பெபின் செல்வபிரிட்டோ ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் சார்பில் தி.மு.க. முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சந்தேகம் இல்லை

அப்போது சிறுமியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என பெற்றோர் உறுதி அளித்தனர். எனவே ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் சிறுமியின் உடல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story