தற்கொலை செய்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சேர்ந்தமரம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சீனு (வயது 12). இவன் அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தினார். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
நேற்று மாணவன் சீனுவின் உடல் பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடந்தது. ஆனால் உடலை வாங்க செல்ல மாட்டோம் என்று கூறி அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாலை 3 மணியளவில் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மாணவனின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை வேண்டும் என கூறினர். இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.