தொழிலாளி உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்


தொழிலாளி உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
x

அய்யலூர் அருகே தொழிலாளி உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33), கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் இருந்து பிடி மண்ணை எடுத்து தனது உறவினரான கருஞ்சின்னூரைச் சேர்ந்த முருகன் (40) என்பவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் வண்டி கருப்பணசாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து கொடுத்ததால் தான் சக்திவேல் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் அவரது உடலை எடுத்துச் சென்று முருகன் வீட்டின் முன்பு வைத்து கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முருகன் உடனே இங்கு வரவேண்டும், மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை சக்திவேலின் உடலை எடுக்க மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சக்திவேலின் உறவினர்களிடம் புகார் மனுவை பெற்றனர். அதன்பின்னர் அவர்கள் சக்திவேலின் உடலை எரியோடு மின் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story