விபத்தில் காயமடைந்தவரை கட்டிலில் படுக்க வைத்து நடுரோட்டில் உறவினர்கள் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே விபத்தில் காயமடைந்தவரை சாலையின் நடுவே கட்டிலில் படுக்க வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விபத்து
விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர் கடந்த மாதம் தனது மனைவி சுதாவுடன் விருத்தாசலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். வேட்டக்குடி கிராமம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மினிலாரி பாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாண்டியனை அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அதேஊரில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் பாண்டியனை கட்டிலில் படுக்க வைத்தபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாண்டியனுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அவ்வழியாக பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்ற ஊழியர்கள் கடும் அவதி அடைந்தனர்.