மாணவரை கண்டித்ததால் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள்
மாணவரை கண்டித்த ஆசிரியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மாணவரை கண்டித்த பள்ளி ஆசிரியரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் சரியாக படிக்காததால், ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால், மாணவனின் தாயார் சுஜாதாவும், உறவினர் சுயம்புலிங்கமும் பள்ளிக்கூடம் சென்று ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, மாணவரின் தாயார் தனது காலில் இருந்த காலணியால் அடிக்க முயன்றதாகவும், சுயம்புலிங்கம் ஸ்குரு டிரைவரை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து, ஆசிரியை அளித்த புகாரின் அடிப்படையில், சுஜாதா மற்றும் சுயம்புலிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்து, இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.