கர்ப்பிணி சாவுக்கு காரணமான கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை பெண்ணாடத்தில் பரபரப்பு


கர்ப்பிணி சாவுக்கு காரணமான    கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள்    போலீஸ் நிலையத்தை முற்றுகை    பெண்ணாடத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடத்தில் கர்ப்பிணி சாவுக்கு காரணமான கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பெண்ணாடம்,

கர்ப்பிணி தற்கொலை

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாலாஜி. இவருக்கும் அரியலூர் மாவட்டம் புக்குழி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மகள் வினோதினி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. 3 மாத கர்ப்பிணியாக இருந்த வினோதினி சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாமனார் வரதராஜனுக்கு பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரதராஜன் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, வினோதினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அங்கு வினோதினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, போலீசார் மூலம் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் புக்குழி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் வினோதினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வினோதினியின் சாவுக்கு பாலாஜி, அவருடைய தந்தை பரமசிவம், தாய் லட்சுமி ஆகியோர் தான் காரணம் எனவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நேற்று மாலை பெண்ணாடம் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வினோதினியின் சாவுக்கு காரணமாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கணவர் கைது

இதனை ஏற்ற உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வினோதினியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலாஜியை பெண்ணாடம் போலீசார் கைது செய்தனர்.


Next Story