இறந்தவரின் அஸ்தியை பெற வந்த உறவினர்கள் முற்றுகை போராட்டம்
சீர்காழியில் மின்தகன மேடை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் இறந்தவரின் அஸ்தியை பெற வந்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
சீர்காழியில் மின்தகன மேடை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் இறந்தவரின் அஸ்தியை பெற வந்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்தகன மேடை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் மின் தகன மேடை அமைந்துள்ளது. இறந்தவர்களில் உடல், இங்கு தகனம் செய்யப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிக்காக இந்த மின் தகன மேடை நேற்று முதல் பூட்டப்பட்டது. இதற்கான அறிவிப்பு தகன மேடை முன்பு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இறந்த ஒருவரின் உடல் இங்கு தகனம் செய்யப்பட்டு அஸ்தி உள்ளே இருந்தது. நேற்று காலை சடங்குகள் செய்ய இறந்தவரின் உறவினர்கள் வந்த போது மின் தகன மேடை வளாகம் பூட்டப்பட்டிருந்தால் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சீர்காழி போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மின்தகன மேடை வளாகத்திலேயே பொது எரியூட்டு தகனமேடையும் அமைந்துள்ளது. அதுவும் சிதிலமடைந்து மின்விளக்கு, குடிநீர் வசதி இல்லாத நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
எனவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மாற்று இடத்திற்கு புதிதாக கொட்டகை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரபரப்பு
பின்னர் நகராட்சி ஆணையர் கூறுகையில் தகன எரிவாயு மேடை பராமரிப்பு பணிகள் முடியும் வரை, இறந்தவர்களின் உடலை எரிக்க மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.