பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒதப்பையில் உள்ள தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சென்னை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பன்சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும்முக்கியமான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.
மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வந்தது.
வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி
அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
பின்னர் அந்த தண்ணீர்7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
வாகன போக்குவரத்துக்கு தடை
இதையடுத்து ஒதப்பை தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மக்கள் தரைப்பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. அதாவது ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.