முக்கொம்பு மேலணையில் இருந்து 1.29 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு


முக்கொம்பு மேலணையில் இருந்து 1.29 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
x

முக்கொம்பு மேலணையில் இருந்து 1.29 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளதால் இரு ஆறுகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சி

முக்கொம்பு மேலணையில் இருந்து 1.29 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளதால் இரு ஆறுகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பியது

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் மீண்டும் நிரம்பி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வருகிறது.

1.29 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து வெளியேற்றப்பட்டது.

உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் 92 ஆயிரம் கனஅடியும், காவிரியில் 37 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு பின்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, முக்கொம்புவில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றத்தினையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story