கல்வராயன்மலையில் பலத்த மழை: கோமுகி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
கல்வராயன்மலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக, கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் மூலம் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே 46 அடி கொள்ளளவு கொண்ட அணையில், 44 அடி வரைக்கும் தண்ணீர் சேமிக்கப்படும். ஏற்கனவே அணை அதன் முழுகொள்ளளவை எட்டி இருந்தததால், அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
நீரில் மூழ்கிய பயிர்கள்
இதனால் கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அதோடு மலை அடிவாரத்தில் உள்ள வாரம், ஆரம் பூண்டி, வெள்ளிமலை உள்ளிட்ட பல கிராமங்களில் ஆற்றங்கரையோரம் இருந்த விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதேபோன்று, பொட்டியம், மாயம்பாடி கிராமங்களிலும் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளனது. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அரசு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.