சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து விட்டார்.
50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு தண்ணீர் திறந்து விட்டார்.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
தமிழகத்தின் மிக முக்கிய அணைகளில் ஒன்றாக விளங்கும் சாத்தனூர் அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதைத்தவிர 90-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெற்று வருகிறது. மேலும் அணை நீரை பயன்படுத்தி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
90 நாட்களுக்கு சாத்தனூர் அணை திறப்பு
ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இந்த ஆண்டு தேவைக்கான மழை பெய்து சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணையில் 118.55 அடி உயரத்திற்கு 7220 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் வருகிற ஜூன் 8-ந்தேதி வரை 90 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இடதுபுற கால்வாய் மூலம் 350 கன அடி நீரும், வலது புற கால்வாய் மூலம் 220 கன அடி நீரும் ஆக மொத்தம் 570 கன அடி நீர் நாள் ஒன்றுக்கு திறக்கப்படுகிறது
அமைச்சர் எ.வ.வேலு திறந்து விட்டார்
இதற்கான தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி இடது மற்றும் வலது புற கால்வாயை திறந்து நீர் பாசன தண்ணீரில் மலர் தூவினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டில் நடைபெற்ற ஆட்சியில் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் உயர வேண்டும் என்பதற்காக தனி பட்ஜெட் போடப்பட்டு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு என்று தனி துறையை ஒதுக்கி அதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்வாய் தூர்வாருதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற 20-ந்தேதி தொடங்க உள்ள பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு என்று தனி நிதியை முதல்வர் ஒதுக்கி அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், உதயசூரியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன் முத்து, ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ், கோவிந்தன், ஒன்றியக்குழு தலைவர்கள் பரிமளா கலையரசன், கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் பூங்கொடி, நல்லதம்பி, செயற் பொறியாளர் எம்.சண்முகம், உதவி செயற் பொறியாளர்கள் அறிவழகன், ராஜேஷ், மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், மகாதேவன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், வக்கீல் கதிரவன், அருணை கன்ஸ்ட்ரக் சன் துரை வெங்கட், நீர்ப்பாசன சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.