கீழணை, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கீழணை, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
காட்டுமன்னார்கோவில்,
தண்ணீர் திறப்பு
கீழணை மற்றும் வீராணம் ஏாியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கீழணையில் இருந்து வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால் வடவாறு, குமிக்கி மண்ணியார் உள்ளிட்ட வாய்க்கால் வழியாக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக கந்தகுமாரன் பகுதியில் உள்ள ராதா மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக மொத்தம் 405 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு தினந்தோறும் விநாடிக்கு 72 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது.
பாசன வசதி
இதேபோல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2,200 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக 750 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக 650 கன அடி, குமிக்கி மண்ணியார் வாய்க்கால் வழியாக 150 கனஅடி, மேலராமன் வாய்க்கால் வழியாக 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதில் மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், தலைமை கொறடா கோவை செழியன் எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன், ஜெயங்கொண்டம் க.சொ.க கண்ணன், சீர்காழி பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு கடலூர் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், விருத்தாசலம் செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர்கள் குமார், லால்பேட்டை ஞானசேகர் உதவி பொறியாளர்கள் வெற்றிவேல், முத்துக்குமார், ரமேஷ், கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.