பிசான சாகுபடிக்கு கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் தண்ணீர் திறப்பு
பிசான சாகுபடிக்கு கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கடையநல்லூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கருப்பாநதி அணையின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் மூலம் மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறுகிறது. அந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தண்ணீர் திறந்து வைத்தார். நேற்று முதல் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வரை வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் சரவணகுமார் மற்றும் கருப்பாநதி நீர் பகிர்மான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அடவிநயினார் அணையின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் மூலம் மொத்தம் 7,643.15 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறுகிறது. இந்த அணையில் இருந்தும் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முதல் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வரை 150 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவுது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.