தொழில் முனைவோர் நிவாரண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


தொழில் முனைவோர் நிவாரண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
x

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் நிவாரண திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் நிவாரண திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதிப்பு

கொரோனா பெருந்தொற்று இந்திய பொருளாதாரத்தில் அனைத்து பிரிவுகளிலும் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறுகிய மற்றும் நடுத்தரகால பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லறை விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை பரிந்துரைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைத்தது. இந்த அறிக்கையை பெற்று அதன் பரிந்துரைகளில் ஒன்றை செயல்படுத்தும் முனைப்பில் தொழில் முனைவோருக்கான கோவிட் -19 பெருந்தொற்று உதவி மற்றும் நிவாரணம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளை கொண்டுள்ளது.

மானியம்

பகுதி 1-ன் கீழ் கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை, ஒரு புதிய நிறுவனத்தை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இதில் நிறுவப்படம் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்பட்டவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

பகுதி 2-ன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலும் இயங்கி வந்த கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை மேற்கொள்ள நிறுவப்படும் எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பயன் பெறலாம்

ஆர்வமும், தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மானிய உதவி பெறுமாறு கேட்டுக்கொள்கிேறன். இதற்கான விண்ணப்பங்களை msmeonline.tn.gov.in என்ற இணைய வழியாக பதிவிடலாம். இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story