மழையால் சேதம் அடைந்த 270 வீடுகளுக்கு நிவாரண தொகை
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த 270 வீடுகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த 270 வீடுகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
கூடுதலாக பெய்த மழை
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தொடங்கியது. மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டது.
இதற்கிடையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் மூலம் இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக பதிவானது. இதன் காரணமாக அவலாஞ்சி, ஊட்டி, கூடலூர் பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நிவாரண தொகை
நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். 2 மாடுகள் இறந்தது. 128 மரங்கள் சாய்ந்து விழுந்தன. 258 வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்தது. 12 வீடுகள் முற்றிலும் தகர்ந்து போனது. இது தவிர 2 ஏக்கரில் வாழை, தலா அரை ஏக்கரில் கேரட், பீட்ரூட் சேதம் அடைந்தது.
பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4,100, முற்றிலும் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளது. இதை பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.