வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Jan 2023 6:45 PM GMT (Updated: 16 Jan 2023 6:45 PM GMT)

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சிவகங்கை

இளையான்குடி,

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஒன்றிய குழு கூட்டம்

இளையான்குடி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்க்காவலன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம் வரவு, செலவு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகம் பேசும் போது, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இது போலவே அனைத்து பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் முறைப்படுத்தி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் பேசும் போது, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் வேலை திட்டம், மின்துறை சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை, தகுந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

நிவாரணம்

ஒன்றிய குழு உறுப்பினர் மலையரசி பேசும் போது, புதுக்கோட்டை ஊராட்சியில் நன்னியாவூர் பகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குடி தண்ணீருக்காக போர்வெல் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் கீர்த்தனா கனகராஜா பேசும் போது, உறுப்பினர்கள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகள் கோரிக்கைகளை மறு கூட்டத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை முதலில் விளக்கி நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இளையான்குடி ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Next Story