வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று சீர்காழி தாசில்தாரிடம் அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள படுகை கிராமங்களான முதலைமேடு, நாதல்படுகை, வெள்ளமணல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. விளைநிலங்களும் நீரில் மூழ்கின. வெள்ளம் தற்போது வடிய தொடங்கினாலும் மேற்கண்ட கிராமங்களில் உள்ள சாலைகள் அனைத்தும் தண்ணீரால் அரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
தடுப்புச்சுவர்
இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சீர்காழி தாசில்தார் செந்தில்குமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கொள்ளிடம் பாலம் முதல் அளக்குடி வரை கொள்ளிடம் தென்கரை ஓரம் உள்ள திட்டப்படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய படுகை கிராமங்களில் தண்ணீர் புகாதவாறு ஆற்றின் படுகை ஓரத்தில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.
நிவாரணம்
வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். நாதல் படுகை, முதலைமேடு பகுதியில் உள்ள கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் அரசு சார்பில் கட்டித்தர வேண்டும். வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடல்நீர் உட்புகாத வகையில் அளக்குடி மற்றும் திருக்கழி பாலை இடையே தடுப்பணை அமைத்து தர வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமமக்களுக்கு தொடர்ந்து 3 மாதம் 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
சாலை மறியல் போராட்டம்
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நவம்பர் மாதம் 4-ந் தேதி கொள்ளிடம் கடைவீதியில் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.