"தமிழ்நாட்டில் மதவாத சக்திகளால் ஒருபோதும் காலூன்ற முடியாது" - வைகோ
சென்னை,
'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும்.
தமிழ்நாடு மிக அருமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறது. இதற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சிக்கின்றனர். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது.
விழுப்புரத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை சேதப்படுத்தியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலை செய்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது."
இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.