மத நல்லிணக்க ஊர்வலம்


மத நல்லிணக்க ஊர்வலம்
x

வேதாரண்யத்தில் விநாயகர் சதுர்த்தி மத நல்லிணக்க ஊர்வலம் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது. கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. பின்பு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார். விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ், தோப்புத்துறை ஜமாத்தை சேர்ந்த அமீர் சுல்தான் அப்சல் உசேன், வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் கரைக்கப்பட்டது. இதேபோல, புஷ்பவனம், செம்போடை, தோப்புத்துறை, வேதாரண்யம் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சிவசேனா கட்சி சார்பில் மத நல்லிணக்க விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை தாங்கினார். நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். சமூக சேவகர் சித்திக், வக்கீல் ஆல்பர்ட் ராயன், நகரசபை உறுப்பினர்கள் ஜூலேகா பீவி அபூபக்கர், சித்ரா குலோத்துங்கன், சுபஸ்ரீ, சிவசேனா மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story