50 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஊட்டியில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 50 கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 50 கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி திகழ்கிறது. கிராமப்புறங்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலை, நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.
ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடையில் இருந்து 1½ அடியை ஆக்கிரமித்து பொருட்களை விற்பனைக்கு வைத்து வருகின்றனர். இதனால் மக்கள் நடந்த செல்ல முடியாத நிலை உள்ளது. சாலையில் இறங்கி நடந்து செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. இதேபோல் ஊட்டியில் அனுமதிக்கப்படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் புகார்கள் சென்றன.
50 கடைகள் அகற்றம்
இதைதொடர்ந்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் காபிஹவுஸ் பகுதி, மாரியம்மன் கோவில் முதல் பஸ் நிலையம் வரை சாலை மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி மொத்தம் 50 கடைகள் அகற்றப்பட்டன. அப்போது போலீசாரே நகர்வு கடைகளை அப்புறப்படுத்தியதோடு, கடைகளில் இருந்த பொருட்களையும் அகற்றினர். இதனால் கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் இளங்கோகிலகுரு, ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்து கடை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.