80 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
கலெக்டர், மேயர் ஆய்வு
கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நடை பாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிந்தன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களின் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நடை பாதைகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
80 கடைகள் அகற்றம்
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிைல பேரூராட்சி சார்பில் கடற்கரை சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த 30 கடைகளும் அகற்றப்பட்டன.
இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.