பஸ்களில் இருந்த 'ஏர்ஹாரன்கள்' அகற்றம்


பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றம்
x

பஸ்களில் இருந்த ‘ஏர்ஹாரன்கள்’ அகற்றம்

தஞ்சாவூர்

தஞ்சையில் பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை டிரைவர்கள் மூலம் அகற்றி உடைத்த போலீசார் அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

புதிய அபராதத்தொகை

தமிழ்நாடு அரசு கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு அபராதம் விதிக்கும் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.100க்கு பதில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி 2-வது முறை சிக்கினால் ரூ.15,000 அபராதம்.

ஆம்புலன்சு, தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம். இன்சூரன்ஸ், லைசென்சு இல்லையென்றால் ரூ.500-க்கு பதில் ரூ.5 ஆயிரம் அபராதம். கார், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக இயக்கப்பட்டால் ரூ.1000 முதல் 4 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

பஸ்களில் ஏர்ஹாரன்

இதுகுறித்து தஞ்சை மாநகரில் ராமநாதன் ரவுண்டானா, அண்ணாசிலை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சையில் ஒருசில தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் (காற்று ஒலிப்பான்) பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை பஸ்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதிகளில் அதிக ஒலி எழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

இதனால் ஏற்படும் அதிக இரைச்சல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் திடீரென எழுப்பப்படும் இது போன்ற அதிக ஒலியினால் சாலையில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர்.

உடைப்பு

இதனை தடுக்கும் விதமாக நேற்று தஞ்சை மணிமண்டபம் அருகே போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார், அரசு பஸ்களை நிறுத்தி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்த பஸ்களில் இருந்து அதனை, அதன் டிரைவர் மூலம் அகற்றினர். பின்னர் அதனை டிரைவர் அல்லது கண்டக்டர் கையால் பஸ் டயருக்கு கீழே வைக்க சொல்லி, பஸ்சை இயக்க வைத்து உடைத்தனர்.

மேலும், இது போன்று இனி ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சோதனையின் மூலம் 4 தனியார் பஸ்கள், 1 அரசு பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இன்று (சனிக்கிழமை) முதல் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு எச்சரிக்கை கிடையாது கண்டிப்பாக அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story