பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான் அகற்றம்
தஞ்சையில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பானை அகற்றி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்
தஞ்சையில் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பானை அகற்றி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்
தஞ்சையில் ஒருசில தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்கள் ) பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை பஸ்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதிகளில் அதிக ஒலி எழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இதனால் ஏற்படும் அதிக இரைச்சல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் திடீரென எழுப்பப்படும் இது போன்ற அதிக ஒலியினால் சாலையில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர்.
அகற்றம்
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் நேற்று தஞ்சை பழைய பஸ்நிலையம் அருகே போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார், அரசு பஸ்களை நிறுத்தி அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டிருந்த பஸ்களில் இருந்து அதனை, அதன் டிரைவர் மூலம் அகற்றினர்.பின்னர் அதனை பஸ் டிரைவர் கையால் பஸ் டயருக்கு கீழே வைக்க சொல்லி, பஸ்சை இயக்க வைத்து உடைத்தனர். மேலும், இது போன்று இனி ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர்.