சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றம்
வாழியூர் கூட்ரோட்டில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே வாழியூர் கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்கூடம் அகற்றி பேவர் பிளாக் கற்கள் புதைக்கப்பட்டன. இங்கு வாழியூர் மற்றும் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்லும் சாலை அனந்தபுரம் வழியாக செல்கிறது.
இந்த கூட்ரோட்டில் விரிவாக்க பணிக்காக சாலையின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த தடுப்புச்சுவரால் வாழியூர் செல்லும் சாலைக்கு வழிவிடாமல், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்து சாலை மறியல் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தனர். அப்போது ஆரணி தாசில்தார் ஜெகதீசன், கண்ணமங்கலம் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதன்பேரில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வாழியூர் கூட்ரோட்டில் இருந்த தடுப்புச்சுவரை அகற்றி, வாழியூர், படவேடு செல்லும் ரோட்டில் சாலை அமைக்கும் பணியை செய்துள்ளனர்.
இதற்காக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.