பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றம் - கல்வெட்டு திறக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு


பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றம் - கல்வெட்டு திறக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு
x

திருச்சி அருகே பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாலும், கல்வெட்டு திறக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி அருகே பா.ஜனதா கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாலும், கல்வெட்டு திறக்க தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.

கொடிக்கம்பம் அகற்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பா.ஜனதாவினர் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரின் பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிலையில் திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஒன்றிய பா.ஜனதா சார்பில் அம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. கல்லூரி மெயின் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை புதுப்பித்து கொடியேற்ற ஏற்பாடுகள் செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த ராம்ஜி நகர் போலீசார் கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். ஆனால் பா.ஜனதாவினர் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை புதுப்பித்து கொடியேற்றினர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கொடிக்கம்பம் திடீரென அகற்றப்பட்டது. போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றியதாக கூறப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த பா.ஜனதாவினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதற்கிடையே 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

கடும் எதிர்ப்பு

இதே போல் கண்டோன்மெண்ட் மண்டல் பா.ஜனதா சார்பில் கருமண்டபம், ஜெயநகர், சக்திநகர் பகுதிகளில் கல்வெட்டு திறந்து கொடியேற்ற முடிவு செய்தனர். இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சிலர் கல்வெட்டை கடப்பாறையால் உடைக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் தி.மு.க.வினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

மேலும் அதே பகுதியில் தி.மு.க.வின் கட்சி கொடிக்கம்பத்தை ஊன்றி கொடியேற்ற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் கொடியேற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பதாகை கிழிப்பு

இதனிடையே பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கருமண்டபம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகையை தி.மு.க.வினர் கிழித்தனர். இதனால் பா.ஜ.க.வினர் மற்றும் தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story