ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே ஆக்கிரமித்து இருந்த சாலையோர நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே ஆக்கிரமித்து இருந்த சாலையோர நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சாலையோரம் ஆக்கிரமிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு பூக்கள், பழங்கள், நொறுக்கு தீனி உள்பட பல்வேறு வியாபாரிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை வைத்து நடத்தி வந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டியில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
வியாபாரிகளுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் அரசு தாவரவியல் பூங்கா சாலை வழியாக துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்- அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருவதால் அந்த சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் கடைகளை அகற்றும்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் 2 வருடங்களாக கொரோனா காரணமாக வியாபாரம் இல்லாததால் இந்த முறை கோடை சீசனுக்கு மட்டும் அனுமதிக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இதைத் தொடர்ந்து இதுவரை வியாபாரிகள் கடைகளை அகற்றாதால் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரம் மூலமாக அங்கு ஆக்கிரமித்து இருந்த கடைகளை அகற்ற வந்தனர். இதனால் ஒரு சில வியாபாரிகள் தங்களது கடைகளை தாங்களாகவே காலி செய்து கொண்டு சென்றனர். மேலும் காலி செய்யாத கடைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகத்தினரை சாலையோர வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடைகள் அகற்றப்பட்ட இடத்தில் அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தனர்.