மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
விருகாவூர் மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தில் உள்ள மயானத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நில அளவையர் விஜயசாந்தி, மணிமாறன் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மயான எல்லையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் விருகாவூர் மயானத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மயானத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிரை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.. அப்போது வருவாய் ஆய்வாளர் பாலு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரலேகா அருள், ஊராட்சி செயலாளர் முத்துவேல் ஆகியோர் உடனிருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.