ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கடலூர்

சிதம்பரம்

போக்குவரத்து நெரிசல்

சிதம்பரம் நகரத்தில் உள்ள 4 ரத வீதிகளும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த வீதிகள் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கும் பஞ்சம் இருக்காது.

இந்த வழியாக பயணிப்பவர்கள் தினசரி நெரிசலை சமாளித்தே, இப்பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலையில் சொல்லவே முடியாது அந்தளவில் நெரிசல் ஏற்படும்.

நகராட்சியில் இருந்து அறிவுறுத்தல்

இத்தகைய போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாக, இருப்பது ஆக்கிரமிப்புகள். சில வணிக நிறுவனத்தினர் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்தும், சாலையில் விளம்பர பதாகை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

இதனால் மக்கள் சாலையில் நடக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அதேபோன்று இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதும் போக்குவரத்து நெரிசலுக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் நகராட்சி ஆணையர் பிரபாகரன், சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால், யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக நீண்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று, சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்செல்வன் மற்றும் போலீசார் நான்கு வீதி பகுதிகளில் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதில் பெரும்பாலான வியாபாரிகள் அகற்றிக்கொண்டனர்.

ஆக்கிரமிப்பை அகற்றாத பகுதியில் நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்றினர். அதன்படி கடைகளின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கீற்றுக்கொட்டகை, விளம்பர பதாகைகள் போன்றவற்றை டிராக்டரில் ஏற்றி சென்றனர். இந்தசம்பவத்தால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story