ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

சோ.புதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ஏழுமலைக்கு சோ.புதூர் கிராமத்தில் நிலம் உள்ளது. இதனருகே வெங்கடபாலகிருஷ்ணன் என்பவருடைய நிலமும் உள்ளது. இவற்றுக்கான பொதுவான பாதை பல ஆண்டுகளாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஏழுமலை பாதையை சிறிது சிறிதாக தனது நிலத்துடன் சேர்த்துக்கொண்டு பயிரிட்டு ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெங்கடபாலகிருஷ்ணன் பலமுறை கேட்டும் வழியை ஏற்படுத்தி தராத காரணத்தால் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெங்கடபாலகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஏழுமலைக்கு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வெங்கட பாலகிருஷ்ணன் கோர்ட்டு அவமதிப்பு வழக்காக மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தாசில்தாருக்கு ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் இன்று தாசில்தார் சக்கரை முன்னிலையில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

இப்பணியில் மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், தலைமையிட சர்வேயர் சாகுல்அமீது, துணைசர்வேயர் முனியன், வருவாய்ஆய்வாளர்கள் சோமாசிபாடி மகாலட்சுமி, வேட்டவலம்அல்லி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

இப்பணியை தடுக்க முயன்ற ஏழுமலையின் மனைவி அமுதா, ஏழுமலையின் சகோதரர்கள் வெங்கட்ராமன், சேட்டு ஆகிய 3 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர்.

அப்போது ஏழுமலை மகள் பிரபா மயக்கமானார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. .


Next Story