ஆக்கிரமிப்புகள் அகற்றம்
முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
அகற்றம்
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். அதற்கான காலக்கெடு முடிந்தும் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. ஆகவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அப்போது பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இந்தநிலையில், நேற்று திட்டமிட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மீனாட்சி, கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, தாசில்தார் அலெக்சாண்டர், கலால் ஆணையர் அழகிரிசாமி மற்றும் தாசில்தார்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லின் எந்திரம் மூலம் வீடுகள், கடைகள் ஆகியவற்றை அகற்றினர். ஆக்கிரமிப்பின்போது திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இலக்கியா, பிரபு, தமிழ்ச்செல்வன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
முதல் கட்டமாக பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு சுற்றுச்சுவர் இடித்து அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. பின்னர் மற்ற ஆக்கிரமிப்புகளும் அகற்ற முயன்றபோது குடியிருப்பு மக்கள் ஒன்று திரண்டு பொக்லின் எந்திரம் மீது கற்களை வீசினர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும்போது 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோர்ட்டு உத்தரவின்பேரில் நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். மனிதாபிமான அடிப்படையில் ஏழை-எளிய மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்றனர்.