திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 15 March 2023 12:30 AM IST (Updated: 15 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டு்க்கல் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதேபோல் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் குவியும் இடமாக பஸ்நிலையம் திகழ்கிறது. இதற்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாதது பெரும் குறைபாடாக உள்ளது. இதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் பழக்கடைகள், தள்ளுவண்டிகளும் பஸ்நிலையத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. இதனால் பஸ் நிலையம் நெரிசல் மிகுந்த இடமாகி விட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ்நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கடைகளின் முன்பு இருந்த படிக்கட்டுகள், சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர். மேலும் பஸ்கள் நிறுத்தப்படும் இடம், நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள், பெட்டிகள் உள்ளிட்டவற்றை நகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்றனர். ஒருசில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் அகற்றினர். இதையொட்டி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story